மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு !
Wednesday, March 10th, 2021சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்து கலைக் களஞ்சிய உருவாக்கப் பணி 2014 ஆம் ஆண்டில் பன்னிரண்டு தொகுதிகளை நிறைவு செய்திருந்தது.
அக்காலப்பகுதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இலங்கை திருநாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியாகவும் இச்செயற்றிட்டத்திற்கான ஊக்கம் நல்கிய காலமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதற்கமைய மீள்பதிப்புச் செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியத்தின் ஆரம்ப பிரதிகள் பிரதமரினால் இந்து மதகுருமார்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இந்து கலைக் களஞ்சியத்தின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கையின் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ஆற்றும் தனித்துவமான சேவைக்கு இதன்போது இந்து மதகுருமார் பாராட்டு தெரிவித்தனர்.
இதன்போது பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் சைவ தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில், மகா சிவராத்திரி நிகழ்வினை சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்கும் வகையில் பகுதியளவிலான அனுசரணையாக நிதியுதவி வழங்கும் செயற்றிட்டமும் இடம்பெற்றது.
இதனடிப்படையில், ஐம்பது ஆலயங்களுக்கு தலா ரூபாய் 50,000 வீதம் நிதியுதவி வழங்கும் இச்செயற்றிட்டத்தின் தொடக்க நிகழ்வாக கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், வரகாபொல ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், ஹொரண ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|