மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி களஆய்வு!

அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதியின் நிலைமைகள் மற்றும் அங்கு வாழும் மக்களது வாழ்வியல் தேவைகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நேற்றையதினம் J/247 தையிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவு, விக்னேஸ்வரா வீதி பகுதியில் மீள்குடியேறிய மக்களது வாழ்வியல் நிலைமைகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தறிந்ததுடன் மக்களுடனான சந்திப்பொன்றும் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அப்பகுதியில் மீள குடியேற்றப்பட்ட மக்கள் தாம் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக குடிநீர் வசதியின்மை, மலசலகூடம், மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் கூட இதுவரை தமக்கு பெற்றுத்தரப்படவில்லை என்றும் தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கான சூழல்களும் இன்னமும் முழுமையாக்கப்படவில்லை என்றும் இவற்றை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறு தொலைபேசி மூலமாக மக்களுடன் கலந்துரையாடிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தமது பகுதியில் உள்ள பொது அமைப்பான கலைநங்கை சனசமூக நிலையத்தினையும் , தையிட்டி கரயங்காடு ஞான வைரவர் ஆலயத்தினையும் புனரமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மக்களது கோரிக்கைகளையும் வாழ்வியல் நிலைமைகளையும் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து துறைசார்ந்த அதிகாரிகளூடாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்பு, வலி தெற்கு கட்சியின் வலி தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன், மற்றும் கட்சியின் வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் திருஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|