மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் விருப்புகளின்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துவதை ஏற்கமுடியாது – ஈ.பி.டி.பியின் மாவட்ட அமைப்பாளர் ஜீவன் குற்றச்சாட்டு!

Thursday, March 17th, 2022

யாழ் மாவட்ட அபிவிருத்தியை மையப்படுத்திய பிரதேச செயலக ரீதியான மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் அதேநேரம் அந்த கூட்டங்களில் மக்களின் தெரிவு மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் தெரிவுகள்  என கூறி மறுபடியும் ஒரு தரப்பினரது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது நிறுத்தவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 14 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு மகஜர் ஒன்றையும் மாவட்ட செயலரிடம் கையளித்திருந்தோம்.

எமது இந்த போராட்டத்தின் போது ஒரு திடமான பதிலை வழங்காது சென்றிருந்த மாவட்ட செயலர் மறுநாள் எமது கோரிக்கையின் வலியுறுத்தலை அடிப்படையாக கொண்டு அவசர அவசரமாக மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்ப குழுவினது பெயரால் மீளாய்வு கூட்டங்களை நடத்தியதாக ஊடக செய்திகளில் அவதானிக்க முடிந்தது. இதில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இதேநேரம் மீளாய்வு கூட்டங்களின் போது அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரசன்னங்களை மையப்படுத்தியதாக அவை இடம்பெற வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். ஆனாலும்’ அவ்வாறு இடம்பெற்றதாக தெரியவில்லை.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதியை மையப்படுத்திய வேலணை ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களை மையப்படுத்திய மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஆனால் குறித்த மூன்று பிரதேச செயலகங்களினதும் பொறுப்புக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

ஆனாலும் தீவகப் பகுதி தொடர்பான அந்த மீளாய்வு கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளுக்கும் அப்பிரதேசங்களின் தவிசாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில் மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் விருப்புகளோ அல்லது அவர்களது ஆலோசனைகள் இன்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையிலானதாக அது அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் மாவட்டச் செயலகத்தின் இவ்வாறான கபடத்தனமான செயற்பாடுகளுக்ம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

000

Related posts: