மீனவர் பேச்சுவார்த்தைக்கென இலங்கை குழு இந்தியா பயணம்!

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கென கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நேற்று இந்தியா பணமாகியது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன், கடற்படை தரப்பிலும் பிரதிநிதியொருவர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளுடன் இலங்கை பிரதிநிதிகள் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இழுவை மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பான முதல்கட்டப் பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் மாதம் புதுடில்லியில் நடைபெற்றிருந்ததுடன், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் பங்கேற்றிருந்தார்.இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக டெல்லியில் அதிகாரிகள் சட்டப் பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் விவசாய நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன் இலங்கை சார்பில் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|