மீண்டும் வற் வரி அதிகரிப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!

Sunday, August 14th, 2016

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் மீளவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11 வீதமாக காணப்பட்ட வற் வரியை அரசாங்கம் 15 வீதமாக உயர்த்தி சட்டமூலமொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தது. எனினும் இந்த சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சூன்யமாக்குமாறு உத்தரவிட்டிருந்தது. உரிய படிமுறைகள் பின்பற்றப்படாது சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

இதனால் அரசாங்கம் உரிய படிமுறைகளைப் பின்பற்றி மீளவும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளத் திர்மானித்துள்ளது.உத்தேச சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்துடன் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சு இது தொடர்பிலான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

எனினும் திருத்தங்களைச் செய்யுமாறு சுதந்திரக் கட்சியோ அல்லது வேறு தரப்புக்களோ இதுவரையில் கோரவில்லை என நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றில் சட்டமூலத்தை சமர்ப்பித்து அதன் பின்னர் செயற்குழு கூட்ட விவாதத்தின் போது திருத்தங்கள் செய்யப்பட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அறவீடு செய்யப்பட்ட வற் வரி தொகையை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முதற் திகதியிட்டு இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால் ஏற்கனவே 15 வீதம் என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்பட்ட வரியையும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறெனினும் வற் வரி குறித்த புதிய சட்டத்திற்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் என நிதி அமைச்சின் உயரதிகாரி வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts: