மீண்டும் டெங்குநோய்த் தாக்கம் அதிகரிப்பு – 40 பேர் பலி !

Wednesday, July 17th, 2019

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொடர்பில் அலட்சியம் செய்யவேண்டாம் என்றும் டெங்கு பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியமெனவும் அப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்துகிறது.

இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 40பேர் டெங்குநோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 27,088பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பிரிவு தெரிவித்தது.

2019ஜூலை 10ம் திகதி வரையான காலப்பகுதியில் 5,820பேர் கொழும்பு மாவட்டத்திலும் 3,536பேர் கம்பஹா மாவட்டத்திலும், 4138பேர் காலி மாவட்டத்திலும் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வாரமொன்றில் சுமார் 30நிமிடங்களை டெங்கு ஒழிப்புப் பணிக்காக ஒதுக்கி சுற்றுப்புறச் சூழல்களை துப்புரவு செய்யுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க கொழும்பு, கம்பஹா, காலி, கண்டி, களுத்துறை, மாத்தறை அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களே டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாக டெங்கு பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு நுளம்பின் தாக்கமானது காலை 6.00மணி முதல் 11.00மணி வரையிலும் பிற்பகல் 3.00மணி முதல் இரவு 7.00மணி வரையான காலப் பகுதியிலும் காணப்படுமென இப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் மக்கள் தம்மை டெங்கு தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

புது வகையான டெங்கு நுளம்பே இம்முறை பரவியுள்ளதாகவும் கடந்த வருடங்களை விட இம்முறை கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளி ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு டெங்கு தொற்றாத வகையில் நுளம்பு வலைகளை உபயோகிக்குமாறும் கடும் காய்ச்சல், வாந்தி, சிவப்பு நிற தழும்புகள் காணப்படின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கோ அல்லது தகைமையுள்ள வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அப்பிரிவு பொது மக்களை அறிவிறுத்தியுள்ளது.

அதேவேளை குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், ஆகியோர் காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலேயே மருத்துவரின் உதவியை நாடுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இவேளை காலி மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படுவதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 8பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த 8பேரில் 7பேர் கராப்பிட்டி வைத்தியசாலையிலும் ஒருவர் பலப்பிட்டியிலும் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் இதுவரை காலி மாவட்டத்தில் 4138 பேர் டெங்கு நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதுடன் காலி நகர் பகுதியில் 1196பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10நாட்களில் மாத்திரம் 20வயதிற்கு குறைவான இருவர் டெங்கினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: