மீண்டும் கிராமத்துக்கு” களத்தில் இறங்குகிறார் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச!

Saturday, November 28th, 2020

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் கலந்துரையாடல் டிசம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் இடம்பெறும் என பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் – பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி பிரிவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து வெளியிட்ட பஷில் ராஜபக்‌ஷ,

“மீண்டும் கிராமத்துக்கு” என்ற செயற்திட்டத்தின் கீழ் வரவு- செலவு திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் இடம்பெறும் கூட்டம் தென்மாகாணத்தில் இருந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் தனி நபர் ஒருவரின் அபிப்பிராயங்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை.

அரச மற்றும் தனியார் துறையினரை உள்ளடக்கி நாட்டு மக்களின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சரியான தீர்மானங்கள் பல வரவு- செலவு திட்டத்தின் ஊடாக எடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இம்முறை வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘கமசதர பிலிசர’ செயற்திட்டம் ஊடாக பெற்றுக் கொண்ட மக்களின் கருத்துக்கள் வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பயனுடையதாக அமையும். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் முழுமையாக செயற்படும்.

வரவு – செலவு திட்டம் குறித்து எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். மக்களுக்கு இதுகுறித்து முழுமையாக தெளிவுப்படுத்தப்பட வேண்டும். மக்களை மையப்படுத்திய வரவு -செலவு திட்டமே பயனுடையதாக அமையும். வரவு – செலவு திட்டத்தில் தேசிய வருமானத்தை ஈட்டுவது குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் வரவு – செலவுத் திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: