மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்!

Thursday, August 29th, 2019

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இவ்வாறு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்காகவும் ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2006.01.01 தினத்திலிருந்து 2018.01.31 திகதி வரையில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) நிறுவனம் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் ஐவர் அடங்கிய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பல்வேறு தரப்பினர்களினால் எழுத்து மூலம் மற்றும் வாய் மூலமான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தகவல்களை பரிசோதனை செய்து 32 சிபாரிசுகள் அடங்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: