மின் கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படாது – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 12th, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வருமானத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இலங்கை மின்சார சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும் நாட்டில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சனிக்கிழமைகளில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற அரசாங்கம் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதோடு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது.

அத்துடன் 03 சதவீத வருட வட்டி இதற்காக விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: