மின் உற்பத்திக்கு டீசல் வழங்க முன்னுரிமை – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 5th, 2022

நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளொன்றுக்கு1000 – 1500 மெட்ரிக் டன் டீசல் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

நுரைச்சோலையில் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

போதுமான ஒக்டென் 92 பெற்றோல் மற்றும்  சூப்பர் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும், ஒக்டேன் 95  பெற்றோலுக்கு மாத்திரம் சிறியளவு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒட்டோ டீசல் வரையறையுடன் விநியோகிக்கப்படுகிறது. மசகு எண்ணெய் மற்றும் ஒக்டேன் 95  பெற்றோல் துறைமுகத்தில் தரையிறக்க தயார் நிலையில் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த டீசல் இறக்குமதி மே 11 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  எனினும், அது 2 நாட்கள் தாமதமாகக்கூடும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவித்த அவர், போதியளவு கையிருப்பு தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாளாந்தம் ஏறக்குறைய 3000 மெட்ரிக் டன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, மற்றுமொரு தொகை பெற்றோல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், டீசலை பதுக்கிவைக்கவோ, தேவையான அளவுக்கு மேல் கொள்வனவு செய்யாமலோ இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

நாளை (6) முதல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (8) வரை நாளாந்தம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணிநேரமும்  மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் நாளாந்தம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு முன்னுரிமை பகுதிகளுக்கு (CC) மேற்படி காலப்பகுதியினுள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: