மின்மோட்டர்கள் திருடியவரும் கொள்வனவு செய்தவரும் கைது!

Sunday, February 3rd, 2019

தென்மராட்சியில் கிணறுகளில் பொருத்தியிருந்த நீரிறைக்கும் மின்மோட்டர்களை திருடினர் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரும் திருடுபவற்றைக் கொள்வனவு செய்துவந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் இருபாலையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 மின் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதங்களில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்மோட்டர்கள் திருடப்பட்டு வந்தன.

ஐந்து குடியிருப்பாளர்கள் திருட்டுத் தொடர்பாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

விசாரணை மேற்கொண்ட பொலிஸார் புத்தளத்தைச் சேர்ந்த நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மின்மோட்டர்கள் திருடியதை அவர் ஏற்றுக்கொண்டார். விற்பனை செய்ததாக இருபாலையில் உள்ள கடையையும் பொலிஸாருக்குக் காண்பித்துள்ளார்.

அவர்கள் கடந்த புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மின்மோட்டர்களைத் திருடியவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவற்றை வாங்கிய வர்த்தகரை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்லவும் நீதிமன்று உத்தரவிட்டது. மின்மோட்டர்களைப் பறிகொடுத்த ஐவர் பொலிஸ் நிலையத்தில் தமது மின்மோட்டர்களை அடையாளம் காட்டியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: