மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Friday, April 7th, 2017

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறினார்.  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமாக இதனை முன்னெடுப்பதாகவும், அதிகாரிகள் தமது கோரிக்கைகளை பொருட்படுத்தாவிட்டால் தொடர்ச்சியாக போராடப் போவதாகவும் அவர் கூறினார்.

இப்போராட்டம் காரணமாக தற்போது நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக ரஞ்சன் ஜயலால் மேலும் கூறினார்.  எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிடம் அத தெரண வினவியது.

இதன்போது பேசிய அமைச்சின் பேச்சாளர் ஒருவர், மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.  இதுதவிர, தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

Related posts: