மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து – மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மின்சார சபையின் அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம், பிரதிப் பொது முகாமையாளரின் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை அலுவலக வாகனங்கள் மூலம் கொழும்புக்கு வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, அவ்வாறு செய்தால் அது அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கருதப்படும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின்சார விநியோகத்தடையோ அல்லது மின்சாரத் தடையை சீர்செய்யும் பணிகளைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளோ இடம்பெறமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அதன் தலைவர் எம்.எம்.சி. பர்டினேன்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரத்துறை தொழிற்சங்கங்கள் இதுபோன்றதொரு நிலைமை தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பில் இலங்கை மின்சார சபை காரியாலயத்திற்கு முன்னால் இன்று(03) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
எனினும் தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்காத வகையில் நாட்டு மக்களுக்கு மின்சார விநியோகம் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மிகப்பெரிய மின்சார விநியோகத்தடை இடம்பெறுமாயின், அதனை வழமைக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், துறைமுக மற்றும் கனியவள கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன
இந்நிலையில், மின்சார விநியோகத்தடை ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் இடமில்லையென இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பர்டினேன்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|