மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு – சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Friday, February 4th, 2022

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் நேற்று காணப்பட்ட சந்தர்ப்பத்தில் மின் துண்டிப்பை அமுல்படுத்தியமை ஒரு சதித்திட்டமாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் முன்அறிவிப்பின்றி மிண்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையினால் நேற்று அமுல்படுத்தப்பட்ட மின் துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

மின் துண்டிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் தமது ஆணைக்குழுவின் அனுமதியினை மின்சார சபை கோர வேண்டும்.

அதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னரே மின் துண்டிப்பை மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும், அந்த நடைமுறை நேற்றைய தினம் பின்பற்றிருக்கப்படவில்லை.

மின்சார மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆகிய கட்டளைச் சட்டங்களை மீறியே மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கூடி ஆராய்ந்து வருகின்றோம். எதிர்வரும் திங்கட்கிழமை அது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: