மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, July 17th, 2020

மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பட்டியல்களின் தொகை பெப்ரவரி மாத பட்டியலின் கட்டணத் தொகையை விட அதிகமாயின் அந்த பாவனையாளர்களுக்கு பெப்ரவரி மாத பட்டியலின் பெறுமதியை குறித்த மூன்று மாதங்களுக்கு மாற்றீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை செலுத்தியுள்ள பாவனையாளர்கள் மேலதிகமாக பணம் செலுத்தியிருந்தால் அத்தொகை எதிர்வரும் மின் பட்டியல்களில் ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிய வரவு செலவு திட்டம் ஒன்று இன்றி சாதாரண அமைச்சரவை ஒன்றை நடத்திக் கொண்டு, கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அரசாங்கம் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த போதிலும், கடந்த மூன்று மாத காலப் பகுதியில் அரசாங்கம் எவ்வித வேலையையும் செய்யவில்லை என சில அரசியல் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தலின் போது மக்கள் உரிய பதில் வழங்குவர் என்றும் பிரதமர் இங்கு தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்து வெற்றிகரமாக முன்னோக்கி வந்த பயணம் 2015 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், பின்னோக்கி சென்ற நாட்டின் எதிர்கால பயணத்தை புதிய அரசாங்கம் ஒன்றின் ஊடாக வெற்றிகரமாக ஆரம்பிக்கப் போவதாகவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: