மானிய உரத்திற்கு 5 கோடி ரூபா வழங்க நடவடிக்கை!
Saturday, December 2nd, 2017
வவுனியா மாவட்டத்தில் 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கையில் 3 ஆயிரத்து 383 விவசாயிகள் முதல் கட்டமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் 10 ஆயிரத்து 480 ஏக்கர் நெற்செய்கைக்கான பதிவுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் 5 கோடியே 24 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவிற்கான மானியத் தரவுகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல சேவைத்திணைக்கள பதில் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் வவுனியா மாவட்டத்தின் கமநல சேவை நிலையங்களின் ஊடாகவே குறித்த எண்ணிக்கை விவசாயிகள் காலபோக நெற்செய்கைக்கான பதிவுகளை இதுவரை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களிற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் பூர்த்திசெய்து அனுப்பப்பட்டு கொடுப்பனவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் செட்டிக்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் 311 ஏக்கர் நிலத்திற்காக 15 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் உலுக்குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் ஆயிரத்து 163 ஏக்கர் நிலத்துக்காக 58 லட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் மடுகந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் 380.5 ஏக்கர் நிலத்துக்காக 19 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாவும் கோயில் குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் ஆயிரத்து 886.5 ஏக்கர் நிலத்துக்காக 94 இலட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இதே போன்று ஓமந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் 672.3 ஏக்கர் நிலத்திற்காக 33 லட்சத்து 61 ஆயிரத்து 250 ரூபாவும் பம்பைமடு கமநல சேவை நிலையத்தின் கீழ் 2 ஆயிரத்து 248.5 ஏக்கர் நிலத்திற்காக ஒரு கோடியே 12 இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாவும் கனகராயன்குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் 2 ஆயிரத்து 85 ஏக்கர் நிலத்திற்காக ஒரு கோடியே 26 லட்சத்து 93 ஆயிரத்து 750 ரூபாவும் வழங்கப்படவுள்ளதோடு நெடுங்கேணி கமநல சேவை நிலையத்தின் கீழ் ஆயிரத்து 281.5 ஏக்கர் நிலத்துக்காக 64 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவும் வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல் கட்டமாக பதிவினை மேற்கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இரண்டாம் கட்டப் பதிவுகளும் இடம்பெறுகின்றது எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|