மானிப்பாய் துப்பாக்கி சூடு: சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல்!

Wednesday, July 24th, 2019

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த அனைவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மானிப்பாய் இணுவில் வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர்.

எனினும் அவர்கள் தப்பிச் சென்ற போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

கொடிகாமம் – கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து சூடு இடம்பெற்றதும், மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை சம்பவ இடத்தில் தவறிய நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர்.

மானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த சிவசுந்தரராஜா சானுசன் (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார்.

அவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில், குறித்த இளைஞர் நேற்று மாலை சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சந்தேகநபர் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தினர். மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts: