மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விரைவுபடுத்த பிரதமர் அறிவுறுத்து!

Monday, February 15th, 2021

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய குறித்த திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவிருப்பதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஒரு சில தினங்களில் சமர்ப்பிப்பதாகவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உறுதியளித்துள்ளார்..

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஊதிய ஆணைக்குழு, நிர்வாக சேவைகள் திணைக்களம், விலைமதிப்பு திணைக்களம் ஆகியவற்றுடனான சிக்கல்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இச்சந்திப்பின்போது பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

கொவிட் -19 நிலைமை காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இந்நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை பல நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும், அதிகாரத்தை பொறுப்பேற்கும் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அந்த மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் இதன்போது பிரதமர் நினைவுபடுத்தினார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால்  நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 90 சதவீதம மீண்டும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது.

அத்துடன், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் போது கட்டாயமாக அந்நிறுவனத்தின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என பிரதமர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய மார்ச் 1 ஆம் திகதிமுதல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ கூட்டங்களுக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என நகர அபிவிருத்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம எம்.ஜீ.கே.ரணவீர இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படாத வகையில் அவர்களின் வசதிக்கேற்ப அதனை திட்டமிடுமாறு அனைத்து உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் பிரதமர் அறிவித்தியிருந்தார்

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் மதிப்பீட்டு அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தார். அதற்கமைய, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 263 மதிப்பீட்டு அதிகாரிகளை கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தலைமை மதிப்பீட்டாளர் திருமதி பி.பி.டீ.எஸ்.முத்துகுமாரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: