மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த வணிக சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

இவ்வருடம் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை மீள செலுத்துவதற்கு 5 பில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதே எமது இலக்காகும். அத்தோடு அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதற்காக மேலும் 1 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியை தணிக்க உதவும் எந்தவொரு நிதி ஒப்பந்தமும் சர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். நன்கொடை வழங்கும் நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.

ஜப்பானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை மீள சரி செய்வதற்கு சிறிது காலம் செல்லும். மருந்து குறித்த சர்வதேச உதவிகளை நாடுவதற்காக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தலைமை வகிக்கின்றார்.

உணவு பற்றாக்குறை விவகாரத்தில் உரம் மற்றும் உணவு பாதுகாப்பிற்கு சமவுரிமையளிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: