மாணவர் விஷாவில் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை!

Saturday, November 21st, 2020

ஐரோப்பிய நாடுகளில் குடியேறுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளைத் தேடுதல் ஆகியவற்றுக்காக மாணவர் வீசாக்களின் ஊடாக ரஷ்யாவிற்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

எனவே, ரஷ்யாவையோ அல்லது வேறு எந்த அண்டை நாடுகளையோ அடைவதற்காக இவ்வாறான சட்டவிரோத வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்காகவும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாகவும் மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்கு பயணிக்கும் அனைவருக்கும் எதிராக  தண்டனைகளும் அபராதமும் விதிப்பதற்குத்  அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த  அறிக்கையில் மேலும் – “இலங்கையின் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கையர்களிடமிருந்து பல எண்ணிக்கையான முறைப்பாடுகள் தூதரகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

தொழில்வாய்ப்புகளைத் தேடுவதற்கும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்குமாக மாணவர் வீசாக்களில் ரஷ்யாவிற்குள் பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்தில் மாத்திரம்  27 இலங்கையர்களை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களில் 17 பேர் சிறைத்தண்டனையை நிறைவுசெய்ததன் பின்னர் ஏற்கனவே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏனைய 10 பேர் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.

இலங்கையின் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள், ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வேறு சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: