மாணவர்கள் உயிரிழப்பு: நீதவான் உத்தரவின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவு

Thursday, May 18th, 2017

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை மனுதாரருக்கு வழங்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் தலையீடு செய்வதாக மனுதாரர்களால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், இதுவரை குறித்த அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை அடுத்து, நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரதியொன்றை மனுதாரர்களுக்கு வழங்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் வாதிடுவதற்கு சட்டத்தரணி இல்லை என தெரிவித்து, இந்த வழக்கை கொழும்பிற்கு மாற்றுமாறு பிரதிவாதிகளால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டது.

இதனை அடுத்து, சம்பவ தினத்தன்று கடமையிலிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts:

தகுதி பெறும் அனைத்து மாணவரும் பல்கலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை கோப்குழு தலைவர் தெரிவிப்பு
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் - ரஷ்யா அறிவிப்பு!