மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை!

Tuesday, October 19th, 2021

கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது.

விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் நிபுணர் தர்ஷசினி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

பாடசாலைகளில் கண்டிப்பாக பாவித்த முக கவசங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவது, சமூக இடைவெளி, கைகளை கழுவிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாடசாலை வகுப்பறை சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் காற்றோட்டத்தினை உறுதிப்படுத்தல், மாணவர்களின் உடல் வெப்பநிலையினை பரிசோதித்தல், ஓய்வறைகளில் அதிக மாணவர்கள் இருப்பதை தவிர்பது, பாடசாலையில் நோயாளர் அறை ஒன்றை ஆயத்தம் செய்வது போன்ற சுகாதார விதிகள் குறித்தும் தொற்று நோயியல் நிபுணர் அறிவுத்தினார்.

மேலும் பாடசாலை வகுப்பறைகளை கவர்சியாக்குதல் வேண்டும், வெளிச்சூழலை சுத்தப்படுத்த வேண்டும் என்று மாகாண பணிப்பாளர் பிள்ளைநாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

பாடவிதானங்களை உடனடியாக ஆரம்பிக்காது மெதுவாக ஒரு நாளைக்கு 3 பாடங்கள் என்ற அடிப்படையிலும் மாணவர்களை விளையாட்டு மற்றும் சித்திரம் கட்டுரை கவிதைகள் போன்ற செயல்பாடுகளில் கூடியளவு நேரத்தினை செலவிடவைப்பது போன்றவற்றில் மாணவர்களின் ஈடுபாடுகளை அதிகரிப்பது குறித்தும், உளவியல் சார் பாடவிதானம் ஒன்றும் நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை மாணவர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: