மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு – குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 6 மாணவர்கள் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் – மீட்புப் பணிகள் முன்னெடுப்பு!

Tuesday, November 23rd, 2021

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் பயணம் செய்த இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த விபத்தில் 6 மாணவர்களும் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இழுவைப் படகில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகே உடைந்து, கவிழ்ந்து இவ்வபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர் காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுள்ளனர். மேலும் இவ்விபத்தில் பலர் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.

எனினும், சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: