மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, February 24th, 2022

பாடசாலை நடைபெறும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை இலகுபடுத்த யாழ் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் இளங்கோ – றீகன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகரின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் வாகன நெரிசல் தொடர்பில் மாநகரசபையின் அக்கறையின்மையை சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர் இளங்கோ அதற்கான நடவடிக்கைகளை பாடசாலை ஆரம்பிக்கும் நாளிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் யாழ் மாநகரின் மத்தியில் அதிகளவான பிரசித்தி பெற்ற பாடசாலைகள் காணப்படுகின்றன. இங்கு பல ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதற்காக குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதருகின்றனர்.

அவ்வாறான நிலையில் தற்போது யாழ் மாநகர பகுதிக்குள் வாகன நெரிசலுடன் மக்கள் நெரிசலும் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது.

குறிப்பாக பாடசாலை நாட்டிளில் மேலும் அதிகளவான நெரிசல் குறிப்பிட்ட காலை மற்றும் மதிய நேரங்களில் காணப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் ஏதுநிலைகளும் அதிகளவாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவுறும் நேரங்களில் நகர பகுதியில் பிரதான வீதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்தை கண்டித்து கண்டன பிரேரணை ஒன்றும் உறுப்பினர்களால் சபையில் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: