மாணவர்களின் பாதுகாப்பினை பொறுப்பேற்கின்றோம்!- பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Tuesday, July 19th, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை பொறுப்பேற்றுக் கொள்வதாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பிலான முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக வரும் மாணவர்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்க உள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவசர நிலைமைகளின் போது மட்டுமே பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பார்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்து மாணவர்களின் கல்வியை சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சிப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர சமுகளிக்காவிட்டால் தீய சக்திகளின் நோக்கங்கள் நிறைவேறியதாகவே அமைந்துவிடும் எனவும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

 

 

 

Related posts: