மாணவர்களாக இருக்கும் போதே சிறந்த அத்திவாரத்தை இடுங்கள் -போதனா மருத்துவமனைப் பணிப்பாளர்!
Friday, November 10th, 2017பாடசாலைப் பருவம் மீண்டும் கிடைக்காது. மாணவப் பருவம் என்பது ஒரு மதிப்பு மிக்க காலம். இந்தக் காலத்தில் கிடைக்கும் அனுபவங்களை எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக வாழ்வதற்கு அத்திபாரமாகக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
பாடசாலையில் தரம் 1 முதல் 13 வரை அரசு, ஆசிரியர் பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்குக் கல்வி வழங்குகிறது. இந்தக் காலத்தில் கல்வியுடன் மட்டும் நின்று விடாமல் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அனைத்து மாணவர்களும் பங்கு பற்ற வேண்டும். அப்போது தான் கல்வியுடன் வெளி உலக அனுபவங்களும் கிடைக்கின்றன.
இந்தக் காலத்தில் கிடைக்கும் மனமகிழ்ச்சி, ஒற்றுமை, ஒழுக்கம், தலைமைத்துவம் அனைவரிடமும் பழகும் வாய்ப்புப் போன்றவை பாடசாலையை விட்டு வெளியேறியதும் கிடைப்பது குறைவு. இதனால் பாடசாலைக் கல்வியில் உள்ள அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புடன் நட்புடன் பழகி எதிர்காலத்தில் சமூகம் மதிக்கும் நிலைக்கு தம்மை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
வகுப்பில் கற்கும் மாணவரிடையே தூண்டுதல் தன்மை காணப்படவேண்டும். பாடங்களில் குறைவான புள்ளியைப் பெறும் மாணவர்கள் காணப்படுவர். அவர்களின் கல்வியின் பின்னடைவு குறித்து ஏளனம் செய்யாமல் அவர்களை ஊக்குவிக்கத் தூண்டுதல் அவசியமாகும். சக மாணவர்களின் தூண்டுதல் நிச்சயம் அந்த மாணவனைச் சிந்திக்க வைத்து கூடுதல் புள்ளிகளைப் பெற வழிவகுக்கும் என்பதை மாணவர் சமுதாயம் மறந்துவிடக்கூடாது. ஆசிரியர்கள் தமது அர்ப்பணிப்பை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குகின்றனர். அதனை உற்று கிரகித்து கவனிப்பது மாணவர்களது கடமை. ஆசிரியர்களின் கற்பித்தலை கவனித்து கிரகிக்கும் மாணவர்கள் கிரகிக்காத மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அனைவரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி கிடைத்த பொறுப்பை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
உயரிய தலைமைத்துவப் பண்பைப் பெறக்கூடிய மாணவத்தலைமையைப் பொறுப்பேற்றுள்ள அனைவரும் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தொடர்ந்து வரும் மாணவத் தலைவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். உங்களின் சிறந்த ஒழுக்கம் வழிகாட்டல் பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைவனவாக அமைய வேண்டும் – என்றார்.
Related posts:
|
|