மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்!

Friday, June 15th, 2018

புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா? என்பதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேர்தல்கள் தாமதமாகின்றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாவிடின் நாட்டிலும் அரச நிறுவனங்களிலும் பல குழப்பங்கள் எற்பட வாய்ப்புள்ளன. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும். இல்லையேல் ஜனநாயத்திற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

இதனால் ஜனநாயகமும் அபிவிருத்தியும் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விடும். சாதாரண சங்கம் என்றாலும் இடைக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டு புதியவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அதேபோன்ற மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

மாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்படி தற்போதைக்கு ஐம்பது வீதம் விகிதாசார முறைமையில் இருந்தும் ஐம்பது வீதம் தொகுதி வாரி முறைமையில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே புதிய முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யவேண்டும் எனப் பலர் கோருகின்றனர். இந்த நிலையில் தற்போது எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் உள்ள நிலையில் அதனை நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்தால் மாத்திரமே எனக்கு தேர்தலை நடத்த முடியும். ஐம்பதுக்கு ஐம்பதா அல்லது அறுபதுக்கு நாற்பதா என்ற தீர்மானத்தை நாடாளுமன்றமே எடுக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதனாலும் அதனையும் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதற்கு அப்பால் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதனையும் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: