மஹிந்த ராஜபக்ஷ – பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
Tuesday, March 28th, 2023யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஏற்கனவே தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துக்காக முன்னொறுதால் தேர்தலில் தோல்வி கண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடிவருவதாகவும் அதேவேளை புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கோ இலங்கை தடையாக அமையக் கூடாது . அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட “Aukus” உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின் எதிர்காலப் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும், இந்து-பசிபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு சமுத்திரங்களைக் கொண்டிருப்பதாகவும், இந்து சமுத்திரத்தில் கப்பல்கள் சுதந்திரமாக பயணித்தல் மற்றும் கடலுக்கடியில் கேபிள்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கு எமது நாடு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதனால் ஆசிய பசுபிக் வலயத்தில் குறிப்பாக தாய்வான் பிரச்சினை இந்து சமுத்திரதிற்குள் கசியாமல் பார்த்துக் கொள்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்..
மேலும் நான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, நாடு மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தது. நீங்கள் கூறியது போல், 25% மக்கள் தொகையில் வறுமை இருமடங்காக உயர்ந்துள்ளது, மேலும் சுமார் 500,000 பேர் வேலை இழந்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு வருமானம் 2018 இல் 12.5 இல் இருந்து 2022 இல் 8.2 ஆக குறைந்துள்ளது.
கடன் சேவை, சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை.
அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% ஆக அதிகரித்துள்ளது. இலங்கை இப்படி பொருளாதார அழிவின் படுகுழியை நோக்கி நகர்ந்த போது நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டது. ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேறவும் பதவியிலிருந்து விலகவும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம், பிரதமர் அலுவலகம், இவையனைத்தும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எனது தனிப்பட்ட வீடு மற்றும் நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து எம்.பி.க்களை வெளியேற்றும் முயற்சி சரியான நேரத்தில் இராணுவம் வந்ததால் தடுக்கப்பட்டது.
நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, நமது வெளிநாட்டு கையிருப்பு குறைந்திருந்தது. திறைசேரியில் பணம் இருக்கவில்லை. தினமும் காலையில் நான் அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து மேலதிகமாக ரூ. 100 மில்லியன் – ரூ. 200 மில்லியன் தேடிக்கொள்ளும் வழிவகையை ஆராய்வேன். எம்மிடம் அந்நிய கையிருப்பு இல்லாத நாட்களும் இருக்கின்றன.
எனவே IMF உடன் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவது எனது முதல் பணியாக இருந்தது. அதற்கு விலை சீராக்கல் தேவைப்பட்டது. இது கடினமான பணியாக இருந்தாலும் மாற்றுவழியிருக்கவில்லை.
பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்தது. இது 2023 முதல் 2026 வரையிலான நிதி ஒருங்கிணைப்புக்கான நான்கு ஆண்டு திட்டமாகும் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் அந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைப் பொருளாதாரத்தின் இரட்டை ஏற்றத்தாழ்வுகள், நிதிப் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு சமநிலைப் பற்றாக்குறை என்பவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது. தேசிய நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான் தற்போது அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினை, தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் அவர்களை விடுவித்தல், அரசியலமைப்பின் கீழ் தேசிய காணி ஆணைக்குழுவை அமுல்படுத்துதல், வடக்கு கிழக்கு காணிகளை உரிமையாளர்களுக்கு மீள வழங்குதல், அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு, மனித உரிமை மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை நிறைவேற்றுதல். அதற்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திட்டங்களில் முன்னெடுப்புகள் சிலவே இவை என்பதை சுட்டிக்காட்டலாம்.
மேலும், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்துடன் உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டம் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய தமிழ் குழுக்களுடனும் கலந்துரையாடி வருகின்றேன். புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொடர்புபடுவதற்காக தனியான புலம்பெயர் அலுவலகத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் சட்டம்,பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான சட்டம் மற்றும் தேசிய பெண்கள் ஆணைக்குழு சட்டம் என்பவற்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான மாநாட்டிற்கான தனது நீண்ட கால உறுதிப்பாட்டை இலங்கை இதுவரை உறுதிசெய்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்களை அதிகாரமளித்தல் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் பெண்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதை நினைவு கூற விரும்புகிறேன்.
மேலும், இந்நாட்டு இளைஞர்களுக்கான உண்மையான, முறைமை மாற்றத்தை இளைஞர் யுவதிகள் கோருகின்றனர். பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்.
மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் . இலங்கையை ஒரு பிராந்திய விநியோக மையமாக மாற்ற வேண்டும். பாரம்பரிய சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி, சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் புதிய சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|