மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, November 30th, 2020

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று மதியம் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள நிலையில், இதன்போது சில துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பின்னர் பொலிஸ் விசேட அதிரடப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பினை பலப்படுத்திய நிலையில், களனி மற்றும் ராகமை பொலிஸ் நிலையங்களில் இருந்து 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மோதலின்போது சிறைச்சாலையினுள் ஒரு தரப்பினர் தீவைத்த நிலையில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

Related posts: