மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. – மண்மேடு சரிந்து வீடு சேதம் – பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை!

Wednesday, July 5th, 2023

மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் இன்று (05.07.2023) காலை மண்மேட்டுடன் கூடிய கொங்கிறிட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

இதன்போது, வீட்டில் யாரும் இல்லாததன் காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, சமையலறை மற்றும் படுக்கையறை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்ககைகள் தோட்ட நிர்வாகத்தினருடன் எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் திம்புள்ள பத்தனை கிராம அதிகாரியூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: