மலேசிய தூதுவர் மீதான தாக்குதல் வடபகுதி மக்களுடைய குரலல்ல – அநுரகுமார திசாநாயக்க!

சிலதினங்களுக்கு முன்னர் மலேசிய தூதுவர் மீது தாக்குதல் நடத்திய சிறு கும்பலின் குரல் வட பகுதி தமிழ் மக்களின் குரலல்ல. தாக்குதலையும் வட பகுதி மக்களையும் இணைத்து நோக்கக் கூடாது என எதிர்தரப்பு பிரதம கொரடாவும் ஜே. வி. பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலேசிய தூதுவர் மீதான தாக்குதல் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் போது கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியே மலேசிய தூதுவர் அங்கு பணியாற்றுகிறார். எமது நாட்டின் மீதான தாக்குதலாகவே இதை கருத வேண்டும். முழு பாராளுமன்றமும் இந்தத் தாக்குதலை கண்டிக்க வேண்டும். வெளிநாட்டு தூதுவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது மலேசிய தூதுரகத்தின் பொறுப்பாகும். ஆனால் அதனை செய்ய மலேசிய தூதரகம் தவறியுள்ளது. அங்கு ஆரம்ப முதல் காணப்பட்ட நிலைமைகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை.
இந்த தாக்குதலை இலங்கையர்கள் மேற்கொள்ளவில்லை. வட பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது அரசியல் அங்கமாக பயன்படுத்தும் குழுவினரே இதனை செய்துள்ளனர். ஆனால் வட பகுதி தமிழ் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளை பின்பற்றவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு வட பகுதி மக்களிடம் கோரப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை செவிமடுக்கவில்லை. எனவே இவ்வாறான குழுக்களுடன் வட பகுதி மக்களை ஒன்றாக இணைத்து நோக்கக்கூடாது. அது நியாயமல்ல. இதற்கு ஜனாதிபதி தேர்தல் சிறந்த சாட்சியாகும்.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான குழுக்கள் சிறிய அளவில் செயற்படுகின்றன. இவர்கள் இலங்கையில் தலையீடு செய்ய இடமளிக்கக் கூடாது. இந்த குழுவின் குரல் வடபகுதி மக்களினதும் குரலாக மாறினாலே பிரச்சினை எழும். ஐரோப்பா மற்றும் நாடுகளில் செயற்படும் குழுக்களின் குரல் எமது நாட்டு தமிழ் மக்களின் குரலல்ல. இந்த தாக்குதலை கண்டிக்க வேண்டும். இந்த குழுக்களை இராஜதந்திர ரீதியில் தோற்கடிக்க வேண்டும்.
Related posts:
|
|