மலேசியாவில் 10,000 இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு வழங்க அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, September 22nd, 2022

மலேசிய அரசாங்கம் பத்தாயிரம் இலங்கையருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றாக இத் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு மலேசிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் மலேசிய மனிதவள மேம்பாடுகள் அமைச்சர் சரவணன் ஆகியோருக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப முயற்சிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் இணைந்து அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொண்டிருந்தார்.

இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், தெரிந்துகொள்ளும் நோக்குடனே அமைச்சர் மலேஷியா சென்றிருந்தார்.

தென்கொரியாவில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்புகையிலேயே சுற்றாடல்  அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மலேசியாவுக்கு விஜயம் செய்தார்.

அங்கு மலாக்கா மாநில ஆளுநர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் அரசாங்கத்தின் வேண்டுகோள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சரவணன், மலேசியாவிலுள்ள சகல கைத்தொழில் நிறுவனங்கள், மலேஷிய தொழில்வாண்மை யாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இலங்கையரை, மலேசியாவின் சகல துறைகளிலும் வேலைக்கு அமர்த்தும் திட்டம் குறித்து பகிரங்கமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தொழில்துறைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் இணையங்களினூடாக தகவல்களைப் பெறுமாறும் இலங்கையருக்கு மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ பிரிவு (oscksm@mohr.gov.my) மற்றும் தீபகற்ப மலேசிய தொழிலாளர் திணைக்களம் (jtksm@mohr.gov.my) ஆகியவற்றை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு மலேசிய தொழில்துறைகளிலுள்ள வெற்றிடங்கள் பற்றி அறிந்துகொள்ளுமாறும் இலங்கையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்காக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மலேசிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசுரங்களை 31ம் திகதிக்கு முன் அகற்றுமாறு கோரிக்கை!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி – போதனா வைத்...
யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை - நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம...