மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Wednesday, June 6th, 2018

மலசலகூடம் அமைப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாத காரணத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி குறித்த தொகையை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வு கூட்டம் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன்,

யாழ் மாவட்டத்தில் குறிப்பாக மலசலகூடம் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதற்கமைய அவர்களிற்கு தேவையின் விகிதாசார அடிப்படையில் மலசலகூடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

யாழ் மாவட்டத்துக்கு தற்போது 14 ஆயிரம் மலசலகூடங்கள் தேவையாக உள்ளது. இந்த வருடம் 891 மலசலகூடங்கள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தேவையின் விகிதாசார அடிப்படையில் தற்போது அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இன்னமும் 13109 மலசலகூடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் தற்போது வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட இருக்கின்றன.அவ்வாறு வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் மலசலகூடமும் சேர்ந்ததாகவே அமையப் பெறவுள்ளன என தெரிவித்தார்.

ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மலசலகூடங்களுக்கு 55 ஆயிரம் ரூபாயே ஒதுக்கப்பட்டும் வருகிறது. இந்த நிதி போதாதென பொதுமக்கள் முறையிட்டுள்ளார்கள்.

அத்துடன் தீவுப்பகுதிகளுக்கு முற்றிலும் போதாததாக இந்த நிதி உள்ளது. மலசலகூடம் மிக முக்கியமானதொன்று. அதன் அடிப்படையில் அவர்களுக்கு சீரான முறையில் அமைப்பதற்கு வழியமைத்து கொடுக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த நிதியை ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts: