மருத்துவ பரிசோதனை குறித்த விசாரணைக்கு  அமைச்சர் ராஜித உத்தரவு !

Monday, August 7th, 2017

மருத்துவப் பரிசோதனைகளுக்காக, சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிகமான கட்டணங்களை அறவிடும் ​தனியார் வைத்தியசாலைகள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனியார் சுகாதார சேவைகள் அபிவிருத்திகளுக்கான பணிப்பாளர் காந்த்தி ஆரியரட்ணவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜூன் மாதம் 19ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், சாதாரண இரத்தப் பரிசோதனையொன்றுக்கு, 250 ரூபாயும் டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகரிக்கப்படும் நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் இரத்தப் பரிசோதனைக்கு, 1,000 ரூபாயும் அறவிடப்படவேண்டும் என்று, சுகாதார அமைச்சு அண்மையில் உத்தரவிட்டது.

நாடளாவிய ரீதியில், டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்தமையினாலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

“பல்வேறு தனியார் வைத்தியசாலைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் இரத்தப் பரிசோதனைகளுக்கு அதிகளவான கட்டணங்கள் அறவிடப்படுவதாக, எமக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சில நேரங்களில், அமைச்சின் உத்தரவுகளை மீறும் வகையில், இந்தத் தொகை, 3,000 ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு அறவிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது” என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.  இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டம் மற்றும் டெங்குவை கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு உதவுவதற்காக உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில், கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம், அரசாங்க தொற்றுநோய் பிரிவில், 121,819 டெங்கு நோயாளர்கள் தொடர்பான விவரங்கள் பதிவாகியுள்ளன.

சுமார் 44.34 சதவீதமான டெங்கு நோயார்கள், மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். 2017ஆம் ஆண்டில், ஆரம்ப 27 வாரத்திலேயே, இந்தளவு உயர்ந்தளவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

.

Related posts: