மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, July 2nd, 2019

நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதாரத்துறையின் எதிர்கால செயற்திட்டங்களில் நோய்த்தடுப்பு மற்றும் நோய் நிவாரண துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்துரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி அன்பளிப்பில் 7000 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, 850 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை நவீன மருத்துவ உபகரணங்களை கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ கூடம், இரத்த சுத்திகரிப்பு நிலையம், மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான புதிய உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி போன்ற வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையுடன் இணைந்ததாக சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 2020 ஆம் ஆண்டளவில் அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது ஆரம்பிக்கப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து மருத்துவமனையை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார். இம் மருத்துவமனையிலுள்ள விசேட CT scanner இயந்திரத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

Related posts: