மருத்துவ சங்கம் போராடுவது யாருக்காக – அமைச்சர் ராஜித!

Friday, September 15th, 2017

மருத்துவ சங்கத்தின் உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்த மருத்துவர் சங்கம் இன்று யாருடைய தேவைக்காக போராட்டம் நடத்துகின்றது என்று தெரியாதிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சைற்றம் பிரச்சினையை தீர்ப்பதற்காக மருத்துவ சங்கம், ஜனாதிபதி நியமித்த குழுவுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகையிலே இவர்கள் தனிவழிசென்று வேலை நிறுத்தம் புரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  சைற்றத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பிற்கு ஊர்வலம் நடத்தப்பட்டு இன்று கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவாக மருத்துவர் சங்கம் கடந்த 12 ஆம் திகதி முதல் இன்று வரை அடையாள வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் மருத்துவ சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சபை கூடி பரிந்துரைகள் குறித்து ஆராய்ந்துள்ளது. சிறு சிறு திருத்தங்கள் தவிர அநேகமானவை தொடர்பில் பிரச்சினை கிடையாது என்றே தெரிகிறது.

முன்பு மருத்துவ சபையின் உரிமையை பாதுகாப்பதற்காக குரல் கொடுத்து வேலைநிறுத்தம் மேற்கொண்ட மருத்துவ சங்கம் இன்று யாருடைய தேவைக்காக போராட்டம் நடத்துகிறது என்று புரியவில்லை. பேச்சுவார்த்தைகளுக்குக் கூட வராமல் மருத்துவ சங்கம் தனியான பயணம் செல்கிறது.

மருத்துவ சபை, ஜனாதிபதி நியமித்த குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகையிலே இவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.

Related posts: