மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Friday, April 3rd, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் எனவும் அச் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அபாயக் கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 முதல் 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும் என கூறியுள்ளது.

எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டைப் பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து, மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிடுகையில்,

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய இலங்கை தற்போது ‘3A’ என்ற கட்டத்தில் உள்ளது.

‘3A’ கட்டம் எனப்படுவது வீடுகளினுள் கூட்டுத் தொற்று நிலையாகும். இவ்வாறு இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை இதிலிருந்து அடுத்தக் கட்டமான ‘3B’ கட்டத்திற்குச் செல்லாமலிருப்பதற்கு தற்போதுள்ளதைவிடவும் கடுமையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அத்துடன் ‘3B’ எனும் கட்டம் கிராமம் அல்லது நகரத்தினுள் குழுக்களாக தொற்று நிலை இனங்காணுதலாகும்.

எனவே, தற்போது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கை அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டியேற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஒருவேளை மாறாக முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இதற்கு முதற்கட்டத்திற்குச் சென்று அதன்பின்னர் நோயாளர்கள் அற்ற கட்டத்திற்கும் செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில் 4 ஆவது கட்டம் மிகப் பாரதூரமானதாகும். சமூகத்தினுள் பரவும் நிலையே 4 ஆவது கட்டமாகும் என்ரும் கூறினார்.

80 வீதத்துக்கும் அதிகமாக சமூக இடைவெளியைப் பேணும் நாடுகளே வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் முழுமையான பயனை அடைகின்றதாக குறிப்பிட்ட அவர், சமூக இடைவெளி என்பது பாதுகாப்பிற்கான பிரதான வழிமுறை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: