மரண தண்டனை விவகாரம் – ஜனாதிபதியின் தீர்மானத்தை மேலும் ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Thursday, July 18th, 2019

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஒக்டோபர் 31ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன தாக்கல் செய்துள்ள குறித்த ரீட் மனு மீதான தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நான்கு கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்திலும் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை கைவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரீட் மனு மீதான தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதிகள் குழாம், அதுவரைக்கும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளனர்.

இந்த மனுவில் சட்டமா அதிபர், தலைமை நீதியமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: