மரணதண்டனை விவகாரம் : ஒத்துழைப்பது கடினம் என பிரித்தானியா எச்சரிக்கை!

Thursday, June 27th, 2019

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கையுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.

“மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும்.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை இலங்கை கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் கொள்கை விவகாரமாக பயன்படுத்துவதை பிரித்தானியா எதிர்க்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.

இது இலங்கையின் அனைத்துலக நிலை மற்றும் சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் காணப்படும் அதன் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும்.

இலங்கை அரசாங்க உயர்ந்த மட்டங்களிடம் நாங்கள் எமது கவலைகளை எழுப்பியுள்ளோம். மரணதண்டனை தொடர்பான தடையை தொடர்ந்து பின்பற்றுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறோம், ”என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் விரைவில் இந்த தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அந்தவகையில் 43 வருடங்களின் பின்னர், இது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: