மரக்கறிகளைத் திருடிய திருநெல்வேலி பொதுச் சந்தைக் காவலாளி கோப்பாய்ப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
Tuesday, June 7th, 2016
கடமைக்கென நியமிக்கப்பட்டிருந்த காவலாளி இரண்டு மூடை மரக்கறிகளைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05-6-2016) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் சந்தையில் வியாபாரிகள் பாதுகாப்பாக வைத்து விட்டுப் போன பச்சைமிளகாய், வெங்காயம், மற்றும் மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை இரண்டு மூடைகளில் தூக்கிச் சென்று சந்தைக்கு வெளிப்புறமாகவுள்ள துவிச்சக்கரவண்டியில் கட்டுவதற்கு ஆயத்தமான நிலையில் சம்பவத்தை நேரில் அவதானித்த மூடை தூக்கும் தொழிலாளி ஏனைய சிலரையும் அவ்விடத்திற்கு வரவழைத்துக் கையும் மெய்யுமாகக் குறித்த நபரைப் பிடித்தனர்.
இதன் பின்னர் பிடிபட்ட காவலாளிக்கு அங்கு நின்றவர்களால் நல்ல கவனிப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து அங்கு நின்ற வியாபாரிகளால் நல்லூர் பிரதேச சபையின் செயலாளருக்குத் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது. பிரதேச சபையின் செயலரின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக நல்லூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் இருவர் சந்தைக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுக் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்திற்குச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதன் போது திருட்டுப் போயுள்ள மரக்கறிகளின் அளவு தொடர்பில் பொலிஸாரால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
Related posts:
|
|