மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, December 6th, 2019மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க. செந்தூர்பதி ராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனைய மாதங்களில் குறைந்த அளவில் காணப்படுகின்றது.
இவ் ஆண்டில் டெங்கு நோயினால் பாதீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகின்றது. டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சைகள் ஒழுங்காக வழங்கப்பட்டாலும் டெங்கு நோயில் இருந்து பாதுகாப்பதே மிகவும் பிரதானமான நோக்கமாக உள்ளது.
மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து டெங்கு நுளம்பின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை தங்கள் வீடுகளில் இருந்தும், நடமாடும் பகுதிகள், பொது இடங்கள், கூடிய நேரத்தை செலவிடும் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டு அழிப்பதன் மூலம் டெங்கு நுளம்பின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலமே டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். மன்னார் மாவட்டத்தில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு காணப்படுகின்றது.
இதில் மன்னார், நானாட்டான் ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒப்பீட்டளவில் கணிசமமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் மன்னார் பகுதியில் அதிக அளவு டெங்கு நோயளர்கள் காணப்படுகின்றார்கள். ஏனைய பிரதேசங்களில் குறைந்த அளவு நோயளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான கட்டுப்பாட்டு முறைகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வழி காட்டலில் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் போது அரசாங்க அதிபரின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரதேசச் செயலக பிரதேச செயலாளர்களின் உதவியுடன் அவற்றின் கீழ் இயங்குகின்ற கிராம சேவையாளர்கள் ஆகியோரின் உதவியுடன் அந்தந்த பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று மன்னார் பொது வைத்தியசாலையில் டெங்கு நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் இவருடைய மரணம் டெங்கு நோயினால் மாத்திரமா இடம் பெற்றது என்பதனை உறுதி படுத்த முடியவில்லை. இவருடைய இரத்த பரிசோதனைகள் பாரதூரமான கிருமி தொற்று நிலையை காட்டியுள்ளது.
சரியான முடிவை சில தினங்களின் பின்பே எம்மால் அறிவிக்கை முடியும். பொது மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து உங்கள் பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் அற்ற தன்மையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|