மன்னார் தேவாலயத்தில் இனந்தெரியாத நபரின் நடமாட்டம் – புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!

Sunday, July 5th, 2020

மன்னார்  பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக அப்பகுதி முழுவதும் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சந்தேகநபர் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் சென்றுள்ளார்.

குறித்த நபர் ஆலயத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை ஆலயத்தினுல் இருந்த பெண் ஒருவர் அவதானித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, குறித்த சந்தேகநபரிடம் அந்த பெண் வினவியபோதும் அவருடைய பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண் இந்த விடயம் தொடர்பாக ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உதவி பங்குத்தந்தை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை கொடுதோர் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பேசாலை பங்குத்தந்தை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இந்நிலையில், பொலிஸார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீவி காணொலியை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சீ.சீ.ரீவி காணொலியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: