மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு!

Friday, July 31st, 2020

மன்னார் ஜோசப்வாஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுப்பதற்கு பாரிய சவாலாக இருந்துவந்த இறங்குதுறை அனுமதிப் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்ததனூடாக தீர்வு காணப்பட்டுள்ளது.

மன்னார் விடத்தல்தீவு பிரதேசத்தில் இருந்து  கடந்த காலத்தில் நிலவிய யுத்தகாலத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மன்னார் ஜோசப்வாஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்களே  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை மூலம் நன்மை பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது – இப்பகுதியிலுள்ள மக்கள் மிக நீண்டகாலமாக கடற்றொழிலை மேற்கொள்வதற்கு இறங்குதுறை இல்லாத காரணத்தால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டதுடன் அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.,

இந்நிலையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர்களிடம் பல தடவைகள் இதற்கான தீர்வை பெற்’றுத்தருமாறு முயற்சிகளை மேற்கொண்டும் அவர்கள் அதற்கான தீர்வை கண்டுதரவில்லை.

ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கிராமத்தில் vision6  அமைப்பின் இளைஞர்கள் மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகத்தை இதுதொடர்பாக அணுகி தீர்வு பெற்று தருமாறு கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மக்களது அத்தியாவசிய தேவைகருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முறய்சி காரணமாக  நேற்றையதினம் (30)  இறங்குதுறைக்கான  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இறங்குதுறைக்கான அனுமதிப்பத்திரத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட மேலதிக இணைப்பாளர் மதன் பொது மக்களிடம் கையளித்திருந்தார்.

இதன்போது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த  தமது வாழ்வாதார தொழிலுக்கான அனுமதி கிடைக்கப்பெற்ற ஜோசப்வாஸ் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.