மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் 1983 முதல் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா! (ஒலிவடிவ செய்தி இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த படுகொலைகள் மற்றும் ஆட்கள் காணாமல் போனது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை செயற்பாடுகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈ.பி.டி.பி ) இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணியிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது விடயம் தொடர்பாக பி.பி.சி. தமிழோசை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேர்காணல் செய்திருந்தது.
இதன்போது டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது – “1983 ஆம் ஆண்டு தொடக்கம் விசாரணை என்பது சாத்தியப்படாத பட்சத்தில் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தாவது ஆரம்பிக்கப்படுவது பொருத்தமானதாக இருக்கும் ”என்றார்.
அத்துடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் காரணமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சகல தரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார். இந்த சந்திப்பின்போது, குறிப்பாக நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் பற்றி தங்களால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்புடன் விடுதலை கிடைக்க வேண்டும்.
பாதுகாப்பு தரப்பு வசமுள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக மீள கையளிக்கப்பட வேண்டும் . தமிழர் பிரதேசங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யுத்த வெற்றி அடையாளங்கள் அகற்றப்பட்டு மக்கள் மனங்களில் யுத்த வடுக்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்களையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த சந்திப்பின்போது முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|