மத்திய அரசின் பூரண அனுசரணையை கொண்டுள்ள கூட்டமைப்பினரால் ஏன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை – ஶ்ரீரங்கேஸ்வரன்!

ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் நாமே என உரிமைகோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்கு இதுவரையில் எதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி புலோலி மத்தி அவ்வொல்லை பகுதி மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின்போது ஆட்சிமாற்றத்தினூடாகவே காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களது நிலைமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுத்தர முடியுமென வாக்குறுதியளித்து மக்களின் வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அபகரித்திருந்தனர்.
அவ்வாறு மக்களின் வாக்குகளை அபகரித்த கூட்டமைப்பினரால் இதுவரையில் எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாதநிலையே காணப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களையும் மத்திய அரசின் பூரண அனுசரணையையும் கொண்டுள்ள கூட்டமைப்பினர் மக்களுக்காகவும் பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்காகவும் பல்வேறு விடயங்களை முன்னெடுக்கக்கூடியதான வாய்ப்புகள் இருக்கின்ற போதிலும் அவற்றை முன்னெடுக்கமுடியாத நிலையில் மக்கள் மீதான அக்கறையும் செயற்றிட்டங்களை செயற்படுத்த திராணியற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மக்கள் நலன்சார்ந்த உழைக்கும் அரசியல் பிரதிநிதிகளை மக்கள் எதிர்காலத்தில் தெரிவுசெய்யவேண்டியது அவசியமானது. அவ்வாறான தெரிவுகளினூடாகவே பிரதேசத்தின் அபிவிருத்திகளை மட்டுமன்றி மக்களின் வாழ்வியலை முன்னேற்றம் செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் இரட்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|