மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது.

Wednesday, November 29th, 2017

உலக உணவு அமைப்பின் ஊடாகப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவுத் திட்டம் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளது. இதனால் அடுத்த வருடம் முதல் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்குவதில் பெரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்தார்.

வடக்குமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

உலக உணவு அமைப்பின் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு மதியத்தில் போசாக்கு உணவுகளை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்கள் அறிமுகப்படுத்திய போசாக்கு உணவுத்திட்டத்தை நிதியில்லை என்ற காரணத்தால் நடப்பாண்டுடன் நிறுத்துவது என அறிவித்துள்ளனர்.

இதனால் எமது மாகாணத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் போசாக்கு மட்டம் வீழ்ச்சி அடைவதற்கான அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு நாம் அரசுடன் கலந்துரையாடியிருந்தோம். அந்தக் கலந்துரையாடலில் அரசின் நிதியுதவியுடன் தரம் 1 தொடக்கம் தரம் 5 ஆம் ஆண்டு வரையான பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்துக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்களில் வன்னி மற்றும் தீவகப் பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் போசாக்கு மட்டத்தில் குறைவாக உள்ளதுடன் அவர்களில் பலர் காலை உணவுகளைக் கூட உண்ணாது பாடசாலைக்கு நீண்ட தூரம் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் போசாக்கு உணவுத்திட்டம் நிறுத்தப்படுவதால் அதிகளவில் அவர்களே பாதிக்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: