மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடல்!

Saturday, March 12th, 2022

யாழ்ப்பாணம் கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில்   ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்று கொடியேற்றத்தை அடுத்து  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

முன்பதாக கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு திருப்பலி குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கபடப்ட்டது. பின்னர் இன்று இரவு 9 மணியுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறவுள்ளது.

இதேவேளை திருவிழாவில் பங்கேற்றுள்ள இலங்கை – இந்திய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது.

இழுவைமடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு இந்திய மீனவர்களிடம், இலங்கை மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட மாகாண கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அ. அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நாட்டின் வளங்களைப் பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் பட்சத்தில் நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்துகொள்ள இலங்கை மீனவர்கள் தயாரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த, இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள், இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். எனினும், மாற்றுத் தொழில் முறைக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

2004 ஆம் ஆண்டுமுதல் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளன. அனைத்து இந்திய இழுவைமடிப் படகுகளையும் மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்துவதற்கு உறுதியான பொறிமுறையை உருவாக்குவது சிறப்பானதாக இருக்கும்.

அதேநேரம், தங்களின் படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டமை தமக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின்போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


மூன்று நாட்களுக்கு மேல் எனின் பேருந்து அனுமதிப்பத்திரம் இரத்து - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது - அரசாங்க அதிபர் அருமை நாயகம...
வெளிநாடுகளில் இயங்கும் 7 அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் இணைத்தது இலங்கை; வெளியானது அதிவிசேட வர்த்தம...