மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் பதிவு – பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை!

மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்துள் 257 கொவிட் 19 தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை மொத்தமாக 223 கொவிட் 19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களில் 20 வயதுக்குட்பட்ட எவரும் மரணிக்கவில்லை. 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட 09 பேரும் 40 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட 66 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 147 பேரும் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 53 வீதமானவர்கள் ஆண்களேயாவர்.
கடந்த வாரம் 1893 கொவிட் 19 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 39 பேர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன.
மட்டக்களப்பில் முதலாவது தடுப்பூசியின் செலுத்துகை சுமார் 2 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முப்பது வயதுக்கு மேற்பட்ட 93 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது செலுத்துகை சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து வரையில் வழங்கப்பட்டுள்ளது. இது 39 வீதமானவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 06 கட்டில்களுடன் கூடியதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வென்டிலேட்டர்கள் உட்பட ஆறு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும் அத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 08 கட்டில்களுடன் கூடிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது.
அந்தவகையில் மக்களாகிய நீங்கள் தற்போதைய முடக்க நிலையில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் கொவிட் தொற்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முற்றாகக் குறைத்துக் கொள்ள முடியும். அதன்படி சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாகப் பின்பற்றுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாகத்த தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 129 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கோவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 உடலங்கள் போதனா மருத்துவமனை பரிதேர அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|