மடு திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் – மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!

Saturday, June 27th, 2020

மன்னார் மடுமாதாவின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் வருடந்தோறும் அரச அனுசரனையுடன் நடைபெறும் பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

‘மருதமடு மாதாவின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும். திருவிழா நாள் அன்று நடைபெறும் திருவிழா மற்றும் திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம். ஆனால் கொரோனா காரணமாக திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த திருப்பலிக்கு வருகின்றவர்களை நாங்கள் அழைத்து நிற்கின்றோம். எக்காரணம் கொண்டும் ஆயிரம் பேருக்கு மேல் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 மணி, 10.30 மணி என வெவ்வேறு நேரங்களில் திருப்பலிகள் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆலயம் வரும் பக்தர்கள் அரச அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதார அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.’ என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்..

Related posts: