மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம்கள் இருப்பது முறையல்ல – வடக்கின் ஆளுநர்!

நாட்டின் எப்பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கலாம். ஆனால் வடக்கில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் அவை இருப்பது முறையல்ல என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது என்பது இராணுவத்தை வெளியேற்றுவது என்று அர்த்தமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கிணங்க அவ்வாறு மீள்குடியேறும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதும் இராணுவத்தினர் தான் என்றும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.
பத்திரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாக வெளியிடப்படும் தகவல்களின் உண்மை நிலை என்ன? என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் வடக்கு தெற்குக் கிடையிலும் மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்குக் குந்தகம் ஏற்படும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக் கூடாது என குறிப்பிட்ட அவர்: நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதில் ஊடகங்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்:-
நாட்டில் இராணுவ முகாம்கள் இருப்பது முக்கியம் எனினும் அவை தனிப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் அமையக்கூடாது. தனிப்பட்ட காணிகளில் அவை இருப்பதும் முறையல்ல.
வடக்கில் இவ்வாறான காணிகளை முதலில் கைப்பற்றியது இராணுவ மல்ல. பயங்கரவாத யுத்தத்தின்போது காணிகள் ஒவ்வொருவரது கைகளுக்கும் மாறியுள்ளது.
எல். ரி.ரி.ஈ. புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல். எப்.என பல அமைப்புகள் செயற்பட்டன. அவர்கள் யுத்தம் செய்தபோது வீடுகளையே அவர்களின் முகாம்கள் போல் உபயோகித்து அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
தெற்கிலும் கடற்கரைப் பகுதி இடங்களை முதலில் கைப்பற்றியது போர்த்துக்கீசர்களே அதன் பின் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கை மாறியது. இவற்றை யார் கைப்பற்றினாலும் அவை எமது அரசாங்கத்தின் காணிகளே இதுபோன்றே வடக்கு சாதாரண மக்களின் காணிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாறின.
முதலில் சில குழுக்களிடமிருந்து இந்தியப் படைக்கு கைமாறியது. பின்னர் அதனைத் தாக்கி எமது படையினர் தம் வசப்படுத்தினர். படையினர் நேரடியாக சென்று மக்கள் வீடுகளில் குடியேறவில்லை. புலிகள் வீடுகளுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியபோது அவற்றை படையினர் கைப்பற்ற நேர்ந்தது.
இப்போது யுத்தம் முடிவுற்ற அமைதி சூழ்நிலையில் மக்களின் காணிகளை மக்களுக்கே மீளளிக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.இந்த காணிகளை மீள கையளிப்பது என்பது இராணுவ முகாம்களை வெளியேற்றுவது என்பதல்ல. அவ்வாறு வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதானால் தெற்கிலும் அது இடம்பெறவேண்டும்.
வடக்கிலும் தெற்கிலும் படை முகாம்கள் இருப்பது முக்கியம். நாட்டின் இறைமை, பாதுகாப்பு ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அவை அவசியம் என்பது அரசாங்கத்தின் கொள்கை.எனினும் வடக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே மீள கையளிக்கப்படவேண்டும்.
இன்றும் அகதி முகாம்களில் இருக்கும் சிலருக்கு வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு அங்குலம் காணிகூட இருந்ததில்லை. அவர்களுக்கும் காணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சகல வசதிகளுடனும் வீடுகள் அமைக்கப்படுகின்றன. அது அரசாங்கத்தின் பொறுப்பு. அதை அரசாங்கம் மேற்கொள்கிறது.
எனினும் எதிர்பார்த்த வேகம் அதில் காணப்படவில்லை. அரசாங்கம் பல செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
|
|